Friday, August 22, 2008

குடியரசுத் தலைவர் வாழ்க நீடு...!

___ கவிஞரேறு அமலதாசன்

அலைகடல் தாலாட்டும் வளநாடு ! – சிங்கை
அதிபர் எஸ். ஆர். நாதன் வாழ்க நீடு !
பலயினப் பண்பாட்டை எதிரொலிப்பார் ! – ஒளிரும்
பகலவன் போல்இயங்கிப் புதிரவிழ்ப்பார் !
அலைகடல் தாலாட்டும் வளநாடு ! – சிங்கை
அதிபர் எஸ். ஆர். நாதன் வாழ்க நீடு !

பதவியில் உயர்ந்தாலும் பணிவுகொள்வார் ! – நாட்டுப்
பணிகளில் முழுவீச்சாய்த் துணிந்து வெல்வார் !
உதவிடும் குணமுடையார் இடர்களைவார் ! – மக்கள்
உள்ளத்தில் தடம்பதித்து நடம்புரிவார் !
அலைகடல் தாலாட்டும் வளநாடு ! – சிங்கை
அதிபர் எஸ். ஆர். நாதன் வாழ்க நீடு !

சிந்தனைத் திறம்காட்டிச் சிறகடிப்பார் ! – இன்பச்
செந்தமிழ் மொழிபேசிச் சிரிப்புதிப்பார் !
சந்தனக் கைசிவக்க அறம்புரிவார் ! – எங்கள்
தலைமகன் இராமநாதன் அருள்பொழிவார் !
அலைகடல் தாலாட்டும் வளநாடு ! – சிங்கை
அதிபர் எஸ். ஆர். நாதன் வாழ்க நீடு !

பொன்மனச் செம்மலென்றும் பெயர்பொறிப்பார் ! – வண்ணப்
பூக்களைப் போல்மணந்தும் புகழ்விரிப்பார் !
தென்னவர் இராமநாதன் இணைக்குறள்பா ! – வெற்றித்
திருமிகப் புவியரங்கில் வினைமுடிப்பார் !
அலைகடல் தாலாட்டும் வளநாடு ! – சிங்கை
அதிபர் எஸ். ஆர். நாதன் வாழ்க நீடு !


குறிப்பு : _____________________________

சிங்கப்பூர்த் தேசியக் கலைகள் மன்றத்தின், உயரிய, இலக்கியக் கலாசார பதக்க விருது பெற்ற,
எழுத்தாளர் சிங்கை. மா. இளங்கண்ணனின், ‘ படைப்புலகம். ’ நூல்கள் வெளியீட்டு விழா,
21/07/2008 திங்கட்கிழை மாலை 6.00 மணிக்கு, அங் மோ கியோ லோரோங் 8, அடித்தள
மன்றத்தில், கோலாகலமாக நடந்ததேறியது.
சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் அதிபர் மாண்புமிகு எஸ். ஆர். நாதன் அவர்கள் கலந்துகொண்டார்.
தமிழ் நூல் வெளியீட்டு வரலாற்றில் குடியரசு அதிபர் ஒருவர் பங்கேற்பது, இதுவே முதல்முறை என்பதால்,
சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய உலகம் பீடும் பெருமையும் கொண்டு செம்மாந்துக் களிக்கறது.
தமிழ்ச் சமுதாயம் மகிழ்சியில் திளைக்கிறது
விழா ஏற்பாட்டுக் குழுவின் முதுகெலும்பாக இருந்து செயலாற்றியச், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின்
மேனாள் தலவர்; மதியுரைஞர், கவிஞரேறு அமலதாசன் வரவேற்புரை ஆற்றினார்.
விருந்தினர்களை வரவேற்று, நூலாசிரியர் இளங்கண்ணனின் சிறப்பியல்புகள் பற்றிப் பேசிய அமலதாசன்,
தமது உரையின் நிறைவில், “அதிபர் அவர்களுக்குச் சிறப்புச் சேர்க்க பொன்னாடையும் பூமாலையும் வரிசைப்பிடித்து நிற்கின்றன. முன்னதாக தமிழ்ப் பாமாலைச் சூட்டி என் உரையை நிறைவு செய்கிறேன் ” என்று கூறி, தாம் இயற்றிய, அதிபரின் புகழ்பாடும் “அலைகடல் தாலாட்டும் வளநாடு ! சிங்கை அதிபர் எஸ். ஆர். நாதன் வாழ்க நீடு” !என்று தொடங்கும், மேற்கண்ட , இன்னிசைப் பாடலை, இசைகூட்டிப் பாடி,,வியப்பலைகளை ஏற்படுத்தினார்.
கூட்டத்தினர் பாராட்டிமகிழ்ந்தனர்.
.

No comments: