Friday, August 22, 2008

தொப்பையில்...!

_____கவிஞரேறு அமலதாசன்



குப்பையைக் கொறித்திட்டுக்

கொக்கரிக்கும் கோழியெலாம்

குன்றிமணி அருமையை

அறியுமோ ?



தொப்பையில் கழிவன்றி ;

தும்பையும் வைரமும்

துங்கமணி மாலையும்

ஒளிறுமோ ?

******

மூர்க்கப்போர்..!

______கவிஞரேறு அமலதாசன்


புற்றுறைப் பாம்பும் ; நுண்மைப்

புலன்தூண்ட மகுடிக் காடும் !

கற்களும் கருணை பொங்கக்

கசிந்தே; நீர்ச் சுரந்துப் பாடும் !

நற்குணப் பண்புச் சூழும்

ஞாலத்தில் அமைதி வாழும் !

முற்றிய விஞ்ஞா னத்தால்

மூள்தல்என் ? மூர்க்கப் போரே !

******

குடியரசுத் தலைவர் வாழ்க நீடு...!

___ கவிஞரேறு அமலதாசன்

அலைகடல் தாலாட்டும் வளநாடு ! – சிங்கை
அதிபர் எஸ். ஆர். நாதன் வாழ்க நீடு !
பலயினப் பண்பாட்டை எதிரொலிப்பார் ! – ஒளிரும்
பகலவன் போல்இயங்கிப் புதிரவிழ்ப்பார் !
அலைகடல் தாலாட்டும் வளநாடு ! – சிங்கை
அதிபர் எஸ். ஆர். நாதன் வாழ்க நீடு !

பதவியில் உயர்ந்தாலும் பணிவுகொள்வார் ! – நாட்டுப்
பணிகளில் முழுவீச்சாய்த் துணிந்து வெல்வார் !
உதவிடும் குணமுடையார் இடர்களைவார் ! – மக்கள்
உள்ளத்தில் தடம்பதித்து நடம்புரிவார் !
அலைகடல் தாலாட்டும் வளநாடு ! – சிங்கை
அதிபர் எஸ். ஆர். நாதன் வாழ்க நீடு !

சிந்தனைத் திறம்காட்டிச் சிறகடிப்பார் ! – இன்பச்
செந்தமிழ் மொழிபேசிச் சிரிப்புதிப்பார் !
சந்தனக் கைசிவக்க அறம்புரிவார் ! – எங்கள்
தலைமகன் இராமநாதன் அருள்பொழிவார் !
அலைகடல் தாலாட்டும் வளநாடு ! – சிங்கை
அதிபர் எஸ். ஆர். நாதன் வாழ்க நீடு !

பொன்மனச் செம்மலென்றும் பெயர்பொறிப்பார் ! – வண்ணப்
பூக்களைப் போல்மணந்தும் புகழ்விரிப்பார் !
தென்னவர் இராமநாதன் இணைக்குறள்பா ! – வெற்றித்
திருமிகப் புவியரங்கில் வினைமுடிப்பார் !
அலைகடல் தாலாட்டும் வளநாடு ! – சிங்கை
அதிபர் எஸ். ஆர். நாதன் வாழ்க நீடு !


குறிப்பு : _____________________________

சிங்கப்பூர்த் தேசியக் கலைகள் மன்றத்தின், உயரிய, இலக்கியக் கலாசார பதக்க விருது பெற்ற,
எழுத்தாளர் சிங்கை. மா. இளங்கண்ணனின், ‘ படைப்புலகம். ’ நூல்கள் வெளியீட்டு விழா,
21/07/2008 திங்கட்கிழை மாலை 6.00 மணிக்கு, அங் மோ கியோ லோரோங் 8, அடித்தள
மன்றத்தில், கோலாகலமாக நடந்ததேறியது.
சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் அதிபர் மாண்புமிகு எஸ். ஆர். நாதன் அவர்கள் கலந்துகொண்டார்.
தமிழ் நூல் வெளியீட்டு வரலாற்றில் குடியரசு அதிபர் ஒருவர் பங்கேற்பது, இதுவே முதல்முறை என்பதால்,
சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய உலகம் பீடும் பெருமையும் கொண்டு செம்மாந்துக் களிக்கறது.
தமிழ்ச் சமுதாயம் மகிழ்சியில் திளைக்கிறது
விழா ஏற்பாட்டுக் குழுவின் முதுகெலும்பாக இருந்து செயலாற்றியச், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின்
மேனாள் தலவர்; மதியுரைஞர், கவிஞரேறு அமலதாசன் வரவேற்புரை ஆற்றினார்.
விருந்தினர்களை வரவேற்று, நூலாசிரியர் இளங்கண்ணனின் சிறப்பியல்புகள் பற்றிப் பேசிய அமலதாசன்,
தமது உரையின் நிறைவில், “அதிபர் அவர்களுக்குச் சிறப்புச் சேர்க்க பொன்னாடையும் பூமாலையும் வரிசைப்பிடித்து நிற்கின்றன. முன்னதாக தமிழ்ப் பாமாலைச் சூட்டி என் உரையை நிறைவு செய்கிறேன் ” என்று கூறி, தாம் இயற்றிய, அதிபரின் புகழ்பாடும் “அலைகடல் தாலாட்டும் வளநாடு ! சிங்கை அதிபர் எஸ். ஆர். நாதன் வாழ்க நீடு” !என்று தொடங்கும், மேற்கண்ட , இன்னிசைப் பாடலை, இசைகூட்டிப் பாடி,,வியப்பலைகளை ஏற்படுத்தினார்.
கூட்டத்தினர் பாராட்டிமகிழ்ந்தனர்.
.

பட்ட மரம்…!

___கவிஞரேறு அமலதாசன்


பட்ட மரமே ! பட்ட மரமே !
பகலிர வென்று பார்த்தி டாமல் ;
நட்பு அன்பென நாளும் துளிர்த்து
நல்ல உறவாய் வளர்ந்த மரமே !

பொட்டல் வெளியில் ; புயல்மழை வெயிலில் ;
பொலிவெலாம் இழந்துப் புழுங்குவ தென்ன ?
‘ நட்டவன் தண்ணீர் ஊற்றுவான் ‘ என்பது ‘
நடப்பில் உன்வரைப் பொய்யாய்ப் போனதே !

ஏனிந்தக் கோலம் ? எதற்கிந்தக் கொடுமை ?
யாருந்தன் ஆடையைப் பறித்தது ?
எதுயிந்த வெறுமையைப் புரிந்தது ?

நீசொல்வ தெல்லாம் நெகிழ்விக்கும் பாடம் !
நிலைகெட்டப் பிறப்பன்றோ இழிந்தது ?
நீதியின் பிடிக்கென்ன நேர்ந்தது ?

எத்தனை உயிர்க்கு நிழலாய்த் தணித்தாய் !
எத்தனை வாய்க்குக் கனியாய் இனித்தாய் !
புத்தம் புதிய வளிவார்த் திளைத்தாய் !
புன்னகைப் பூவாய்ப் பூத்துக் கிளைத்தாய் !

காற்றில் இலையசைத்துக் கன்னல்பா தொடுத்தாயே !
கனிவாய்க் கிளைக்கையால் புள்ளினத்தை அணைத்தாயே !
ஈற்றில் விறகாகி எரிந்துனையே கொடுத்தாயே !
ஈகம் புரிவதற்கே இப்பிறவி எடுத்தாயே !


குறிப்பு:_________________________

சிங்கப்பூர் நாட்டின் புகழ்மிக்கத் தமிழ்க்கவிஞர் அமலதாசன் ;
கவிஞரேறு என்று போற்றப் படுபவர்; அவர்தம் ‘ பட்டமரம் ‘
என்னும் கவிதையை , சிங்கப்பூர் அரசின் தேசியக் கலைகள் மன்றம்
தேர்வு செய்து , 16 / 08 / 1995 முதல் 19 / 10 / 1995 ஆம் நாள்வரை,
சிங்கப்பூர் பெருவிரைவு தொடர்வண்டியில், (MRT TRAIN) அலங்கரித்து அழகுப் பார்த்தது.

பதிவு:: ‘தமிழ் நேசன்’’ ( 03 / 03 / 1996 ) தமிழ் நாளிதழ் ,
கோலாலம்பூர், மலேசியா.

Sunday, August 17, 2008

என்ன செய்யலாம்...?

___கவிஞரேறு அமலதாசன்

இன்னிசைப் பொழிந்திடும்

குயில்கள் இருக்கையில்

சொன்னதைச் சொல்லும்

கிளிகளைப் போற்றுவார்

சின்ன மனிதர்கள்

சிந்தனை இன்றியே

என்ன செய்யலாம்

இவர்கள் திருந்திட…?

***********

Tuesday, August 12, 2008

இளங்கண்ணனின் 'படைப்புலகம்' வெளியீடு

தமிழ்மொழி வளர்ச்சிக்காக, அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகளை
நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் !
தமிழ்ச் சமுதாயத்திற்கு, சிறப்பு விருந்தினர்
மாண்புமிகு அதிபர் எஸ்.ஆர். நாதன் வேண்டுகோள் !


சிங்கப்பூர்த் தேசியக் கலைகள் மன்றத்தின், உயரிய இலக்கியக் கலாசாரப் பதக்க விருது பெற்ற எழுத்தாளர், சிங்கை மா. இளங்கண்ணனின் ‘படைப்புலகம்’ நூல்கள் வெளியீட்டு விழா 21 / 07 / 2008 திங்கட்கிழமை மாலை 6.00 மணிக்கு, அங் மோ கியோ லோரோங் 8 ‘அடித்தள மன்றத்தில்’, அருமையாக நடந்தேரியது.

சிறப்பு விருந்தினராக மாண்புமிகு அதிபர் எஸ். ஆர். நாதன் கலந்துகொண்டார்.
தமிழ்நூல் வெளீயீட்டு வரலாற்றில், அதிபர் ஒருவர் கலந்துக்கொண்டது இதுவே முதல்முறை
என்பதால், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய உலகம், பீடும் பெருமையும் கொண்டுச் செம்மாந்துக்
களிக்கிறது. தமிழ்ச்சமுதாயம் பெருமிதத்தில் திளைக்கிறது.

திங்கட்கிழமை, மாலை 6.00 மணி, ஆறு நூல்கள், விலை இருநூறு வெள்ளி, இந்தப் பின்னணியில் விழா நடைபெற வேண்டி இருந்தமையால், தமிழ் அமைப்புகள் இதை ஒரு சவால் மிக்க நிகழ்வாகக் கருதின.

சில அமைப்புகள் மறுதலித்துவிட்ட நிலையில், சிங்கை. மா. இளங்கண்ணன் முறையிட்டதற் கிணங்க,
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மேனாள் தலைவர்; மதியுரைஞர், கவிஞரேறு அமலதாசன், முன்வந்துப் பொறுப்பேற்றார். செயலில் இறங்கினார்.

அதிபரின் வருகை; விருதுகளைக் குவித்து வைத்துக்கொண்டு, சிங்கப்பூர்த் தமிழுக்கு மகுடம் சூட்டும் எழுத்தாளர், என்று எண்ணிப் பார்க்கையில், இந்தவிழா கண்டிப்பாக நடைப்பெற்றே தீரவேண்டும், நடத்தியே ஆகவேண்டும் என்று தீர்மாணித்தார். முன்னய தலைமைத்துவப் பட்டறிவு, அவருக்குக் கைகொடுத்தது.

‘தமிழ்த்தாய் நிச்சயம் அருள்பாலிப்பார்’ என்று அவர் எப்போதும் சொல்லும் முழக்கத்தை முன்னெடுத்து, பாவாணர் அறக்கட்டளை நிறுவனர் திரு. கோவலங்கண்ணன், தேசிய நூலக வாரியத் தலைவர் திரு. வரப்பிரசாத், மூத்த நூலகப் பொறுப்பாளர் திருமதி. புஷ்பலதா, வளர்தமிழ் இயக்கத் தலைவர் திரு. வி. பி. ஜோதி, மக்கள்கழக ஒருங்கிணைப்பு நற்பணிப் பேரவைத் தலைவர் திரு. திருநாவுக்கரசு, தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர்
திரு. ஹரிகிருஷ்ணன் முதலியவர்களை ஒரணியில் இணைத்தார். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், மாதவி இலக்கிய மன்றமும் ஆதரவாளர்கள் வரிசையில் அணிவகுத்தன.

புக்கிட்தீமா சமூக மன்றத் தலைவர் திரு. அருணாசலம், அப்பகுதியைச் சேர்ந்தத் தொழில் முனைவர் திரு. மாணிக்கவாசகம் போன்றோர் நட்புடன் கைகொடுத்தனர்.

ஆனந்தபவன் சைவ உணவகத்தின் இயக்குநர் திரு. இராமச்சந்திரா, கலைஞர் சங்கத்தின் தலைவர் திரு. ச. வரதன், தமிழாசிரியர் சங்கத் தலைவர் திரு. சாமிக்கண்ணு ஆகியோர்,
நல்ல தமிழ் உணர்வாளர்கள் என்பதை உறுதிப்படுத்தினர்.
நிகழ்ச்சியன்று, அவர்கள் கலந்துகொள்ளவிருந்த ஒரு மேலாண்மைக் குழுக்கூட்டத்தை ஒத்திவைத்து, நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தனர்.

வணிகப் பெரும் வள்ளல் திரு. எஸ். எம். ஏ. ஜலீல், மார்ட்டன் மாண்டிச்சேரி குழுமம் தலைவர் டாக்டர் சந்துரு, முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நிறுவனர் திரு. எம். ஏ. முஸ்தபா, தமிழர் பேரவைத் தலைவர் டாக்டர் ஆர். தேவேந்திரன், ஆகியோர் சிறப்புநூல்கள் வாங்கி பெருமை சேர்த்தனர்.


ஜி.ஜி.எஸ். புத்தக நிலையத்தின் தலைவர் திரு. ராமசாமி, ஜோதி ஸ்டோர்
இயக்குநர் திரு. ராஜ்குமார், ராயல் சாரி பேலஸ் அதிபர் திரு. வி.எஸ்.இலட்சுமணன், செல்வி ஸ்டோர் தலைவர்
திரு. மா. அன்பழகன், கோமளவிலாஸ் அதிபர் திரு. இரா. குணசேகரன், உட்லண்ஸ் உணவகத்தின் இயக்குநர் திரு.ராஜா, ஆர்க்கேட் மருந்தக உரிமையாளர் திரு. இராஜகொபால் போன்றோர் ஏற்றமான கருத்துகளை வழங்கி ஊக்கம் கொடுத்தனர்.
எற்பாட்டுக் குழுவுக்குப் பின்னணியில், செந்தமிழ்ச்செல்வர் வை. திருநாவுக்கரசு,
கொள்கை ஆய்வுக் கழகத்தின் இயக்குநர் திரு.அருண்மகிழ்நன் ஆகியோர், சீரிய கருத்துகளை
வழங்கி, உந்து சக்தியாக விளங்கினர்.

இளங்கண்ணனன் இலக்கியப் பங்களிப்புக்கு மானியம் கொடுத்த, தேசியக் கலைகள் மன்றத்தின் உயர் பொறுப்பாளர் திரு. லீ சுவான் ஹியாங், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள்,
நற்பணிச் செயற்குழுத் தலைவர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள், தொண்டர்கள்,
தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள், எழுத்தாளர் இளங்கண்ணனின் உறவினர்கள் என பலதரப்பு
மக்களும், விழாவில் கலந்துகொண்டு தங்கள் சமுதாயக் கடைமைகளைச் சிறப்பாக நிறைவேற்றினர்.
சிங்கப்பூர்த் தொலைக்காட்சி செய்திப்பிரிவு, தமிழ் வானொலியின் ஒலி 96.8, தமிழ்முரசு, தமிழ்நேசன் போன்ற செய்தி நிறுவனங்கள் தங்கள் பங்கை ஆற்றின. ஜெமினி கிராபிக்ஸ் பிரிண்டர்ஸ்,
பாண்டியன் நாதன் வீடியோ போன்ற அமைப்புகளும் பங்களிப்புச் செய்தன.


<<< அரசாங்கத்தின் உதவிகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் : அதிபர் >>>


இந்த அழகான விழாவில், அதிபர் எஸ். ஆர். நாதன் சிறப்புரை ஆற்றினார்.
“சிங்கப்பூரில் தமிழ்மொழி வளர்ச்சிக்காக, அரசாங்கம் பல முயற்சிகளைச் செய்து வருகிறது. இந்த உதவிகளைத் தமிழ்ச் சமுதாயமும் , படைப்பாளர்களும் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்” என்று, தமது உரையில் அதிபர் குறிப்பிட்டார்.

கவிஞரேறு அமலதாசன், முனைவர் சுப. திண்ணப்பன், திரு. வி.பி.
ஜோதி, திரு. கோவலங்கண்ணன், திருமதி. புஷ்பலதா ஆகியோர், இவ்விழாவில் முக்கியப் பங்குவகித்தனர்.
திருமதி. புஷ்பலதா நிகழ்ச்சி நெறியாளராகப் பணியாற்றினார்.
தொடக்கமாகத் தமிழ் வாழ்த்து இடம் பெற்றது. எழுத்தாளர் இளங்கண்ணனின் பெயரப் பிள்ளைகள் கலையரசு, யாழினி, குறளினி, புகழினி அகியோர் பாடினர்.

கவிஞரேறு அமலதாசன் வரவேற்புரை நிகழ்த்தினார். அனைவர்க்கும் வரவேற்புக் கூறி,
இளங்கண்ணனின் சிறப்பியல்புகளைப் பற்றிப் பேசிய அவர், தமது உரையின் நிறைவில்,
“அதிபர் அவர்களுக்குச் சிறப்புச் சேர்க்கப் பொன்னாடையும் பூமாலையும் வரிசைப்பிடித்து
நிற்கின்றன. முன்னதாக தமிழ்ப்பாமாலை அணிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்”
என்று கூறி, அதிபரின் பெருமைகளைப் பறைசாற்றும், தாம் இயற்றிய “அலைகடல் தாலாட்டும்
வளநாடு ! சிங்கை அதிபர் எஸ். ஆர். நாதன் வாழ்க நீடு” ! என்று தொடங்கும் இன்னிசைப் பாடலை, இசைக்கூட்டிப் பாடி வியப்பலைகளை எற்படுத்தினார். கூட்டத்தினர் வரவேற்றுப் பாராட்டி மகிந்தனர்.

வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு. வி.பி.ஜோதி, இளங்கண்ணனின் பங்களிப்புக்குப்
பாராட்டு வழங்கி, தலைமையுரை நிகழ்த்தினார்..
பேராசிரியர் முனைவர் திண்ணப்பன் அவர்கள், இளங்கண்ணன் நூல்களின் தலைப்பைத் தொட்டும், படைப்புகளில் மிளிரும் நயங்களை விரித்தும் சிறப்புரை ஆற்றினார்.
நூலாசிரியர் இளங்கண்ணன் ஏற்புரை வழங்கினார். பிரிட்டிஸ் பிரதமர் வின்சன் சர்ச்சில் அவர்களீடம், “இந்தப் போரில் ( இரண்டாம் உலகப்போர் ) நீங்கள் தோற்றுப் போனால் என்ன செய்வீர்கள்’” ? என்று செய்தியாளர்கள் கேட்ட போது, “நான் சேக்ஸ்பியரின் இலக்கியங்களைப் பரப்புவேன்” என்று பதில் அளித்தாராம். இதிலிருந்து இலக்கியங்கள் எத்துணை சக்தி வாய்ந்தவை என்பதைப் புரிந்துகொள்ளலாம், என்று அவர் பேசினார்.

அதன்பின்னர், முனைவர் திரு. சுப. திண்ணப்பன் அவர்கள், அதிபரிடம் “அமலதாசன்
தமது வரவேற்புரையின் போது, தங்களைப் பற்றியச் சிறப்புப் பாடலை, இசைகூட்டிப்
பாடினார்” என்று கூற, அதிபர் “எங்கே பாடுங்கள்” என்று சொல்ல, தயக்கம் காட்டிய
கவிஞரேறுவை நோக்கி, “அதிபர் பாடச் சொல்கிறார் பாடுங்கள்” என்று, தேசிய நூலக
வாரியத்தின் தலைவர் திரு. வரபிரசாத் நினைவுறுத்த, அமலதாசன் மீண்டும் பாடி
அசத்தினார்.