Tuesday, August 4, 2009

படித்தவர்கள் பாராட்டுகிறார்கள்...!

“தமிழுணர்வின் மொத்த உருவம் அமலதாசன்”

பிறப்பின் பயனே தமிழ் இலக்கியத்தைச் சுவைத்தலும் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடுதலுமே என்று நம்பி நடப்பவர் அவர். அமலதாசனின் சொல்லும் செயலும், மொழி இலக்கியம் பற்றிய விடாப்பிடியான போக்கும் அவரைப் பற்றிய இத்தகைய மதிப்பீட்டைச் செய்யத் தூண்டுகின்றன.

நாற்பது ஆண்டுகளாக திரு. அமலதாசன் கவிஞராக, தொண்டராக, தலைவராக, உணர்ச்சிமேலிடப் பேசும் பேச்சாளராக, தமிழுக்காக உரத்த குரல் கொடுப்பவராக, எழுத்தாளர்கழகத் தலைவராக நன்கு அறிமுகமானவர்.

“தமிழர் தலைவர் தமிழவேள்”, “புல்லாங்குழல்” அகிய இருநூல்களிலும் நான் போற்றும் சிறப்பியல்பு, அவற்றில் கவிஞர் பயன்படுத்தியுள்ள இயல்பான, எளிமையான இனிய தமிழ்நடை. சிங்கப்பூரின் பன்மொழிச் சூழலில் பேசிப் பழக அதிக வாய்ப்பின்றி, தமிழைத் தாய்மொழியாகக் கற்று, தேர்வு எழுதும் கட்டாயத்திலுள்ள வளரும் தலைமுறையினரும் புரிந்துகொள்ளும் தமிழில் அமலதாசன் கவிதைகள் இருப்பது மகிழ்ச்சி தருகிறது. வாய்விட்டுப் படித்துத் தமிழில் நாப்பழக்கம் எற்பட மாணவர்கள் இக்கவிதைகளைப் படித்துப் பயன்பெறலாம்.

திரு. அமலதாசனின் “புல்லாங்குழல்” கவிதைகளும், ‘தமிழர் தலைவர் தமிழவேள்’ கவிதைகளும் சிங்கப்பூர் சிந்தனை ஓட்டத்தில் உள்ளவை. குடியரசின் சமுதாயம், அரசு, மொழி, பலயினச் சூழல் என வெவ்வேறு துறைகளையும் தொட்டுப் பேசுவன. இதனால் படிப்போர், கவிதை கூறும் பொருளுடனும் அது எழுப்பும் உணர்வுகளுடனும் தங்களை இணைத்துக் கொண்டு கவிதைகளைச் சுவைக்க இயலும்..

திரு. அமலதாசன் எந்தப் பொது நிகழ்ச்சியில் பேசினாலும், தமிழவேளைப் பற்றிக் குறிப்பிடஅல்லது அவர் ஊட்டிய தமிழுணர்வையும் ஆற்றிய பணிகளையும் புகழத் தவறுவதில்லை.எனவே அவர் வெளியடும் முதல் நூல்களுள் ஒன்றாக ‘தமிழர் தலவர் தமிழவேள்’ அமைந்திருப்பது எதிர்பார்க்கக் கூடியதே. அதுவும் தமிழவேள் நூற்றாண்டு நிறைவு எழுப்பியநினைவலைகள் அடங்குமுன் இத்தகைய கவிதைநூல் பிறப்பது நல்லாக்கமே.

தமிழவேள் பற்றிய நூலில் அமலதாசன் கையாண்டிருக்கும் முறை சற்று வேறுபாடானது.நூலின் சரிபாதிக் கவிதைகள், தலைவராக வளர்ந்தவரின் புகழ் பாடுவதற்கு முன், சிங்கப்பூரின் வரலாற்றுப் பின்னணியையும் சமூக நிலைமைகளையும் எடுத்துரைக்கின்றன. இந்த உத்தி திரு. சாரங்கபாணீயின் பணித்திறனைக் கவிஞர் விவரிக்கும் போது நன்கு புரிந்துகொள்ள உதவுகிறது.

அடிக்கடி சமூகத்தைக் கேட்டுப்பார்த்து அலுத்துப்போன பாவலர் அமலதாசன், தாமே தமிழ வேளுக்கு எழுப்பியுள்ள மணிமண்டபமும் அழியாச் சிலையுமே “தமிழர்தலைவர் தமிழவேள், கவிதைப் படைப்பு“


__ செந்தமிழ்ச்செல்வர் வை. திருநாவுக்கரசு
மேனாள் தமிழ்முரசு ஆசிரியர்; தலைவர், வளர்தமிழ் இயக்கம்.
12 / 10 / 2004

Monday, August 3, 2009

“தமிழவேள் கொண்டான்” கவிஞரேறு அமலதாசன் (1939)

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மேனாள் தலைவர் (1987–2005); மதியுரைஞர் கவிஞரேறு அமலதாசன், மலேசியா கோலகுபுபாரு, “உலுகலிடோணியன்” என்னும் பால்மரத் தோட்டத்தில் பிறந்தார் (1939). தந்தையார் ஆபேல் ஆசிரியர்;கண்காணி, தாயார் சின்னத்தாய் என்னும் குழந்தையம்மாள். அப்பா ஆபேல், இரண்டாம் உலகப் போரின் போது (1942) தாய்லாந்து மரண ரயில்பாதை அமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் காலமானார். வளர்ப்புத் தந்தை அப்பு அவர்களின் அரவணைப்பில் வளர்ந்த கவிஞர். தோட்டப் பள்ளியில் தமிழும், ரவாங் “கிளைவ்” சிரம்பான் “நெகிரி செம்பிலான் டீச்சர்ஸ் யூனியன்” “ரீஜன்” பள்ளிகளில்.ஆங்கிலமும் கற்றார். .தமிழ்முரசு மாணவர் மணிமன்ற இதழின்வழி (1958) எழுத்துப் பயிற்சியை மேற்கொண்டார். 1960-இல் சிங்கப்பூருக்குக் குடிப்பெயர்ந்தார். திரேசாள் என்னும் பெயரிய தம் தாய்மாமன் மரியநாயகம் அவர்களின் மகளை, மணமுடித்தார். அமலதாசன் திரேசாள் இல்லறத்தினரின் செல்வங்கள்; லில்லிமேரி அமல், அருள்நாதன் அமல், அறவேந்தன் அமல்.

தொடர்ந்து தமிழ்நேசன்; தமிழ்மலர் நாளிதழ்கள்; மாதவி, திரையொளி போன்ற திங்களிதழ்கள், மேடைக் கவியரங்குகள்; சிங்கை வானொலி கவியரங்குகள்; தொலைக்காட்சி. நிகழ்ச்சிகள் என்று, பல தளங்களிலும் எழுதிப் புகழ்ப்பெற்றார். சிங்கப்பூர்த் தேசியக் கலைகள் மன்றத்தின் பன்மொழி ஆக்கப் பதிப்பு “சந்தங்கள்” சிங்கப்பூர்க் கவிதைகள் ஆயிரத்தாண்டு” தொகுப்பிலும், மற்ற அமைப்புகளின் சிறப்பு மலர்களிலும், கவிஞரேறுவின் கவிதைகள் கண்சிமிட்டுகின்றன. மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் என்னும் நூலில் பத்துத் தலைப்புகளில் கவிஞரின் கவிதைகள் மணம்பரப்புகின்றன. “அலைபாடும் கடலும்…” எனத்தொடங்கும் பாடல், 1975-ம் ஆண்டின், தேசியப் பாடல் போட்டியில் பாராட்டுப் பெற்ற சிந்திசைப் பாடலாகும். “பட்டமரம்” என்னும் கவிதை, சிங்கப்பூர் பெருவிரைவு ரயில் (MRT) வண்டியை அலங்கரித்தப் பெருமைக்குரியது. ‘தமிழுக்குப் பொற்காலம்’ என்னும் பாடல், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் மூன்றாம் பரிசுக்குரியப் பொற்பதக்கத்தைச் சூடிக்கொண்டது. “சிங்கப்பூர் என்று சொல்லும் போதிலே…” என்ற பாடல், 2005-இல் நடந்தேறிய தேசியப் பாடல் போட்டியில் முதல்பரிசை வென்றதுடன், தேசியநாள் கொண்டாட்டப் பேரணி அணிவகுப்பில், பல்லாயிரக் கணக்கான மக்கள்; தலைவர்கள் முன்னிலையில், இசைக்கோலம் கண்டு சாதனைப் படைத்தது.
தமிழவேள் கோ. சாரங்கபாணி; கவிவாணர் ஐ. உலகநாதன் ஆகியோரை உயிராக மதிக்கும் அமலதாசன், ஆங்கில மொழியாக்கத்துடன் கூடிய, “தமிழர் தலைவர் தமிழவேள்” “புல்லாங்குழல்” ஆகிய இரண்டு கவிதை நூல்களைத் தமிழுலகுக்கு வழங்கியிருக்கிறார். இவ்விரு நூல்களும் தமிழகத்திலும் சிங்கப்பூரிலும் வெளியீடுகள் கண்டன. சிங்கப்பூர் நூல்வெளியீட்டு வரலாற்றில் இது ஒரு சாதனை நிகழ்வாக பெயர்ப் பொறித்தது. ஏராளமான கவிதைகள் வடித்துள்ள கவிஞர், “கவிஞரேறு” “இனமானப் பாவலர்” “தமிழவேள் கொண்டான்” போன்ற சிறப்புப் பட்டங்களையும், “தமிழவேள் விருது” “பாரதியார்” “பாரதிதாசன்” விருது களையும், “பொதுப்பணி விருது”களையும் குவித்திருக்கிறார். தேசியப் புத்தக மேம்பாட்டு வாரியத்தின் சிங்கப்பூர் இலக்கியப் பரிசு 2006 போட்டியில், “புல்லாங்குழல்” தகுதிச் சான்றுதல் பெற்றிருக்கிறது. சிங்கப்பூர் சிம் பல்கலைக் கழகத்தின், பி.ஏ. வகுப்புக்கான பாடப் புத்தகத்தில், கவிஞரின் கவிதைகள் சிறகு விரிக்கின்றன. சிங்கப்பூர்க் கலைக் களஞ்சியத்தில், கவிஞரின் இலக்கிய, சமூகப் பங்களிப்புப் பற்றியக் குறிப்புகள் அச்சாகி அணிசெய்கின்றன.
நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாய் திரு.அமலதாசன் கவிஞராக, தொண்டராக, தலைவராக, உணர்ச்சி மேலிடப் பேசும் பேச்சாளராக, தமிழுக்காக உரத்த குரல் கொடுப்பவராக, நன்கு அறிமுகமானவர். தமிழர் திருநாள் விழாக்குழு, திருவள்ளுவர் நூலகம், மாதவி இலக்கிய மன்றம், குடியரசின் வெள்ளிவிழா தொடர்பான இந்தியர் பண்பாட்டு மாத தமிழ்மொழிக் கொண்டாட்டக்குழு, தமிழ்மொழி வாரம் ஏற்பாட்டுக்குழு, தமிழர் பேரவை, தேசியப் புத்தக மேம்பாட்டு வாரியம் போன்ற அமைப்புகளின்வழி, பல்வேறு பொறுப்புகள் வகித்து, முத்திரைப் பதித்தவர்.

சிகரப் பொறுப்பாக, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவராகப் பதினெட்டு ஆண்டுகள் பணியாற்றி, கழகத்தை உச்சத்தில் கொண்டு நிறுத்தியவர். தமிழவேள் விருது உருவாக்கி, எழுத்தாளர் பலர்க்கும் வழங்கியவர். நூல் வெளியீடுகள்; கவியரங்குகள்; சொற்பொழிவுக் கூட்டங்கள் நடத்தி, இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டவர். நாட்டுப்பற்று, மொழியுணர்வு, இனமானம் மிக்கவர் நம்கவிஞர்.