Friday, June 27, 2008

கவிஞரேறு அமலதாசன் இலக்கியச் சமூகப் பணிகள்: பரிசுகள்; பாராட்டுகள்; விருதுகள்...!

பிறப்பு : கவிஞரேறு அமலதாசன், 1939ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்கள், முதல்நாள், மலேசியா கோலசிலாங்கூர் மாநிலத்தின் கோலகுபுபாரு, `உலுகலிடோனியன்` என்னும் பால்மரத் தோட்டத்தில்
பிறந்தார்.

அன்புத் தந்தையின் பெயர் ஆபேல். அருமை அன்னை சின்னத்தாய். என்கிற குழந்தையம்மாள். வளர்ப்புத் தந்தை அப்பு. மனைவி திரேசாள். பிள்ளைகள் லில்லிமேரி அமல், அருள்நாதன் அமல், அறவேந்தன் அமல்.

கல்வி : தோட்டத்துப் பள்ளியில் தமிழ்க்கல்வி. `ரவாங் கிளைவ் கல்வி நிறுவனம்`, `சிரம்பான் நெகிரி செம்பிலான் டீச்சர்ஸ் யூனியன் பள்ளி`,
`சிரம்பான், ரீஜண்ட் கல்வி நிறுவனம்` இவற்றில் நான்காம் படிவம்வரை ஆங்கிலக் கல்வி.

எழுத்து முயற்சி : 1958ஆம் ஆண்டு, தமிழ்முரசு மாணவர் மணிமன்ற இதழில் எழுத்துப்பணி தொடக்கம். மலேசியா, சிங்கப்பூர், தமிழகம் போன்ற நாடுகளில் இருந்து வெளிவரும் நாளிதழ்கள், இலக்கியத் திங்கள் ஏடுகள், வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் இலக்கியப் பங்களிப்பு.
சிங்கப்பூர், மலேசிய நாடுகளில், நடந்தேறிய இலக்கிய விழாக்கள், மாநாடுகள், ஆய்வரங்குகள். மொரீசியஸ் நாட்டில், மலேசியாவில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள். தமிழகம் சென்னையில் உலகத் தமிழ் ஒப்புரவாளர் மாநாடு இவற்றிலெல்லாம் இலக்கியச் சொற்பொழிவாற்றல் மற்றும் கவிதைகள் படைத்தல்.
எழுத்தளார்களின் கவிதை, சிறுகதைத் தொகுப்புகள், மாநாட்டுச் சிறப்பு மலர்கள் பலவற்றிலும் வாழ்த்துரைகள், பாராட்டுக் கவிதைகள் படைத்தல்.
தமிழ்முரசு, தமிழ்நேசன், தமிழ்மலர் நாளேடுகள்; திங்கள் இதழ்கள்; தமிழர் திருநாள் விழா, இலக்கியப் போட்டிகளில் பரிசுகள்.

நாடு, மொழி, சமுதாயம், காதல், தத்துவம், இயற்கை, சிறுவர் பாடல்கள்,
இசைப்பாடல்கள் என்று இதுநாள் வரையில் ஏராளமான எழுத்தோவியங்கள் உருவாக்கம்.


<<< படைப்பிலக்கியம் : பாராட்டுகள், பரிசுகள். >>>


1975ஆம் ஆண்டு : “அலைபாடும் கடலும்” எனத்தொடங்கும் பாடல், நான்கு மொழிகளுக்குமான தேசியப் பாடல் இயற்றும் போட்டியில்
பாராட்டுப் பெற்றது.

வானொலியிலும், தொலைக்காட்சியிலும் பலமுறை ஒலி, ஒளிபரப்புக் கண்டது.

1995ஆம் ஆண்டு : சிங்கப்பூர் தேசியக் கலைகள் மன்றம், “ பட்ட மரம் ”
என்னும் கவிதையைத் தேர்வு செய்து, சிங்கப்பூர் பெருவிரைவு போக்கு வரத்து வண்டியில் இடம்பெறச் செய்தது.

1997ஆம் ஆண்டு : சிங்கப்பூர் மக்கள் கழகம், இந்திய நற்பணிக் குழு ஒருங்கிணைப்புப் பேரவையின் ஏற்பாட்டில், “ சங்கரிலா “ தங்கும் விடுதியில் நடைபெற்ற, மாபெரும் சமூக விருந்துக் கூட்டத்தில், அப்போதையப் பிரதமரும், இன்றைய மூத்த அமைச்சருமான மாண்புமிகு “ கோ சோக் தோங் “ அவர்களைச் சிறப்பித்து எழுதிய, “ காட்சிக்கோ எளியவர் ” எனத்தொடங்கும் பாடல், மக்கள் கழகக் கலைக்குழுவினரால் இனிமையாகப் பாடப்பெற்று, வரலாற்றில்
இடம்பிடித்தது.

1997ஆம் ஆண்டு : மலேசியக் கவிஞர் முரசு நெடுமாறன் அவர்களின், “மலேசியக் கவிதைக் களஞ்சியம்” என்னும் தொகுப்பு நூலில், பத்துத்
தலைப்புகளில் கவிதைகள் பதிப்பிப்பு.

2000ஆம் ஆண்டு : “ இரவிலும் பகலை எதிபார் ” என்னும் கவிதை, பன்மொழி ஆக்கத்தில், தேசியக் கலைகள் மன்றம் வெளியிட்ட,
” சந்தங்கள் சிங்கப்பூர் கவிதைகள் ஆயிரத்தாண்டு ” என்னும் தொகுப்பில் அச்சாக்கம்

2001ஆம் ஆண்டு : “ தமிழுக்குப் பொற்காலம் ” என்று தொடங்கும் பாடல்,
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின், பொன்விழா இலக்கியப் போட்டியில், மூன்றாம் பரிசுக்குறியப் பொற்பதக்கம் பெற்றது

2004ஆம் ஆண்டு : ஆங்கில மொழியாக்கம் பெற்ற, “ தமிழர் தலைவர் ,
தமிழவேள்” , “ புல்லாங்குழல் ” ஆகிய இரு கவிதை நூல்கள், தமிழகம்
சென்னையில், `உலகத் தமிழர் மையம்` என்னும் அமைப்பின் எற்பாட்டில் வெளியீடு கண்டன.
கவிஞர்கள், புலவர்கள், அறிஞர்கள், முனைவர்கள், இதழாசிரியர்கள்,
ஆய்வாளர்கள் எனப் பல்துறைப் பெருமக்களும் பங்கேற்ற விழாவில்,
தமிழ்நாட்டின் அப்போதைய கல்வியமைச்சரும், இன்றைய நிதியமைச்சருமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களும், கவிப்பேரரசு
வைரமுத்து அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு,
நூல்களை வெளியிட்டுப் பெருமைப் படுத்தினர்

2005ஆம் ஆண்டு : மேற்குறித்த இரு நூல்களும், சிங்கப்பூரில்
`சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்` ஏற்பாட்டில் மிகச்சிறப்பாக
வெளியீடு கண்டன. விழாவில் சிங்கப்பூரின் அப்போதைய கல்வி அமைச்சரும், இப்போதைய நிதியமைச்சருமான
மாண்புமிகு தர்மன் சண்முகரத்னம், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வாழ்த்துரை வழங்கி, நூல்களை வெளியிட்டுச் சிறப்புச் சேர்த்தார்.
தமிழகத்தின் இலக்கியச்செல்வர் குமரி அனந்தன் அவர்கள், சிறப்புப்
பேச்சாளராக் கலந்துக்கொண்டு நூல்கள் குறித்தும் நூலாசிரியர் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
கவிஞரேறு அமலதாசன் `தமிழை நேசிப்பவரல்ல, சுவாசிப்பவர்` என்று,
அவர் பாரட்டிப் பேசினார்.
கல்வியாளர்கள், இலக்கிய வாணர்கள், வணிக வள்ளல்கள், தமிழ்ப்பெருமக்கள், கல்லூரி மாணவர்கள் என்று, பெரும்திரளாகக் கூடிய கூட்டத்தினர் ஒவ்வொருவரும் நூல்கள் வாங்கி மகிழ்ந்தனர்.
`இது ஒரு சாதனை விழா` என்று சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் குறிப்பிட்டது.

2005ஆம் ஆண்டு : நான்கு மொழிகளுக்குமான தேசியப் பாடல் போட்டியில், “சிங்கப்பூர் என்று சொல்லும் போதிலே…!” என்ற பாடல்
முதல்பரிசுப் பெற்றது.


2006ஆம் ஆண்டு : சிங்கப்பூர்த் தேசிய விளையாட்டரங்கத்தில்
, 09/08/2006ல் நடந்தேறிய, குடியரசின் நாற்பத்தொன்றாம் ஆண்டு தேசிய நாள் கொண்டாட்ட அணிவகுப்புப் பேரணி விழாவில், முதல்பரிசுப் பெற்ற மேற்குறித்தப் பாடல், முழக்கம் கண்டது.


<<< இலக்கியப் பங்களிப்பு : பட்டங்கள் , விருதுகள். >>>


1989ஆம் ஆண்டு : மலேசியப் பொன்பாவலர் மன்றத்தின்,
“ கவிஞரேறு ” பட்டமளிப்பு.
மலேசிய அறநிதிச் செல்வர் திரு.அஸ்மி கந்தசாமி,
“ கவிஞரேறு பட்டம் ” பொறித்த தங்கத்தாலான விருதை, அணிவித்தார்.
1995ஆம் ஆண்டு : இலக்கியப் பங்களிப்புக்கான, பாராட்டு விருதளிப்பும்,
பணமுடிப்பும். மலேசிய பாரதிதாசன் இயக்கத்தின், எழுத்தாளர் தின பெருவழாவில், மலேசியப் பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு, விருதையும் பணமுடிப்பையும் வழங்கி, பெருமைப் படுத்தினார்.
2005ஆம் ஆண்டு : “ இனமானப் பாவலர் ” பட்டமளிப்பு.
உலகத் தமிழர் மையம், சென்னை அமைப்பின் சார்பில், தமிழ்நாடு கல்வி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன், “ இனமானப் பாவலர் ” என்னும், பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்...
2005ஆம் ஆண்டு : “ தமிழவேள் கொண்டான் ” பட்டமும் விருதளிப்பும்.
சென்னை தமிழ்நாடு, உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவையின் சார்பில்,
அதன் தலைவர் மலர்மாமணி புலவர் இளஞ்செழியன், “ தமிழவேள் கொண்டான் “ பட்டமும் விருதும் அளித்துச் சிறப்பித்தார். .

2005ஆம் ஆண்டு : தேசியப் பாடல் போட்டியில், முதல்பரிசு பெற்றமைக்காக, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் பாராட்டு. விருதளிப்பு. கழகத்தின் சார்பில், சிங்கப்பூர் கொள்கை ஆய்வுக்கழகத்தின் தலைவர் திரு. அருண்மகிழ்நன், வழங்கினார்.

2005ஆம் ஆண்டு : தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர்த் தமிழ்ச்சங்கம்,
பாலு மீடியா மேனேஜ்மென்ட் நிறுவனம் சார்பாக, “ பாராட்டு விருதளிப்பு ” மேற்குறித்த அமைப்புகளின் சார்பில், தமிழகத் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார் வழங்கினார்

2006 ஆம் ஆண்டு : “ சிங்கப்பூர் கலைக்களைஞ்சியம் ”
சிங்கப்பூர் கலைக்களஞ்சியத்தில்,
கவிஞரின் இலக்கிய; சமூகப் பங்களிப்புப் பற்றிய
குறிப்பு, பதிவு செய்யப்பட்டுக் காணக் கிடைக்கிறது

2006 ஆம் ஆண்டு : “ சிங்கப்பூர் இலக்கியப் பரிசு “
தேசியப் புத்தக மேம்பாட்டு வாரியத்தின், ‘சிங்கப்பூர் இலக்கிகியப் பரிசு
2006’ போட்டியில், கவிஞர் அமலதாசனின் “ புல்லாங்குழல் “ என்னும் நூல், தகுதிச் சான்றுதல் பெற்றது.

2006ஆம் ஆண்டு : இலக்கிய, சமூகப் பங்களிப்புக்காக, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின், உயரிய “ தமிழவேள் விருது ”
எழுத்தாளர் கழகத்தின் சார்பில், கல்வி அமைச்சர் திரு.தர்மன் சண்முகரத்னம், பொன்னாடை போர்த்தி, ஏலக்காய் மாலை அணிவித்து,
ஐந்தரைபவுன் தங்கப் பதக்கத்தைச் சூட்டி, சான்றிதழையும் பரிசாக வழங்கினார்.

2007ஆம் ஆண்டு : “ பாரதியார் பாரதிதாசன் ” விருது.
தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில், சிங்கப்பூர் வர்த்தக, தொழில் துணையமைச்சர் திரு.எஸ்.ஈஸ்வரன், “பாரதியார்” “பாரதிதாசன்” விருதை வழங்கிப், பெருமை படுத்தினார்.

<<< பொதுப்பணி விருதுகள் : >>>

2001ஆம் ஆண்டு : சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் சங்கத்தின், “ தமிழர் திருநாள் ” விருது.
சங்கத்தின் சார்பில், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழகத்தின், தெற்காசிய வட்டாரத் தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர்
சுப. திண்ணப்பன் வழங்கினார்.

2003ஆம் ஆண்டு : கடையநல்லூர் முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுப்பணி விருது.
கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின், 60ஆம் ஆண்டுவிழா விருந்துக் கூட்டத்தில், மேயரும் அல்ஜூனியட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான, திரு.சைனுல் அபிடின் அவர்கள், மக்கள் நலப்பணிகளுக்காக விருதளித்துச் சிறப்பித்தார்.

2005 ஆம் ஆண்டு : ஜோஸ்கோ பயண நிறுவனத்தின் பொதுப்பணி விருது.
பயண நிறுவனத்தின் சார்பில், தமிழகத் திரைப்படப் பாடலாசிரியர் வித்தகக்கவிஞர் பா.விஜய், விருதினை வழங்கிப் பெருமைப் படுத்தினார்.

2006 ஆம் ஆண்டு : பாலு மீடியா மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் பொதுப்பணி விருது.
பாலு மீடியா சார்பில், தமிழகத் திரைப்படத் துறையின் இயக்குனர், இமையம் திரு.பாரதிராஜா, விருதினை மகிச்சியுடன் வழங்கினார்.


<<< இலக்கிய, சமூகப்பணிகள் : >>>

கவிஞரேறு அமலதாசன், இலக்கியம் படைப்பதோடு, சமூகப்பணிகளையும் தரத்தோடு எடுப்பாகச் செய்துவருபவர்.
1961ஆம் ஆண்டிலிருந்து, பல்வேறு இலக்கிய, சமூக அமைப்புகளில்
முக்கியப் பதவிகளை வகித்து வருகிறார்.

1961 – 1964 ஆம், ஆண்டுகளில்….
அவலக் தமிழ்ப்பள்ளி பாலர்வகுப்பு ஆசிரியர்.
அவலக் திருவள்ளுவர் நூலகச் செயலாளர்.
அவலக் தமிழர் திருநாள் விழாக்குழு உறுப்பினர்.

1962 – 1982 ஆம், ஆண்டுகளில்….
மாதவி இலக்கிய மன்றம்: பொருளாளர், பொதுச்செயலாளர்,
துணைத்தலைவர்.

12/07/1981 - 14/06/1987 ஆம், ஆண்டுகளில்….
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்:
எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினர்,துணைத்தலைவர்.

14/06/1987 - 26/06/2005 ஆம், அண்டுகளில்….
1987ஆம் ஆண்டிலிருந்து, 2005ஆம் அண்டு ஜூன் திங்கள்வரை,
பதினெட்டாண்டுகள், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின்,
தலைவர் பொறுப்பு.

26/06/2005 ஆம், நாள்முதல், எழுத்தாளர் கழகத்தின் மதியுரைஞர்.

1990 ஆம், ஆண்டு…
சிங்கப்பூர் குடியரசின் வெள்ளிவிழாக் கொண்டாட்டம்:
இந்தியர் பண்பாட்டுமாத கொண்டாட்டக் குழுவின், இணைத்தலைவர்.
தேசியப் புத்தக மேம்பாட்டு மன்றத்தின், பேராளர்.

1995 – 1997 ஆம், ஆண்டுகளில்…
தமிழ்மொழி வாரம்,:விழா எற்பாட்டுக்குழு உறுப்பினர்,
ஆலோசகர்.

2000 – 2001 ஆம், ஆண்டுகளில்….
தமிழர் பேரவை உதவித்தலைவர்.
கலாசாரக்குழுத் தலைவர்.


<<< கொள்கைகள் : >>>

நாட்டுப் பற்று; மொழியுணர்வு; சமுதாய மேம்பாடு;
இனமானம் போன்ற பண்பு நலன்களில் திளைத்து,
இலக்கியம் சமுதாயம் என்று இயங்கிக் கொண்டிருக்கும்
கவிஞரேறு அமலதாசன், தமிழவேள் கோ. சாரங்கபாணி
அவர்களின் கொள்கைகளையும் உயிராக மதித்துப் போற்றுபவர்.
செயல்படுத்துபவர்.

உள்நாட்டு இலக்கியங்களையும், உலகப் படைப்புகளையும்,
படைப்பாளர்களையும் உயர்வாக மதிப்பவர்.

“ நாளெல்லாம் மன்பதைக்குத் தொண்டு செய்வோம்
நாமெல்லாம் மனிதரென ஒன்று சேர்வோம் “
என்னும் கொள்கைப் பிடிப்பாளராக விளங்குபவர்.

*****************************************************************************************************************.

.

No comments: