Tuesday, May 13, 2008

அலைபாடும் வளநாடு...!

___ கவிஞரேறு அமலதாசன்




அலைபாடும் கடலும் அணியாடும் கலமும்

அரசோச்சும் எழில்தங்கத் தீவு !

நிலையான வளமும் நேரான வாழ்வும்

நிறையாகும் எம்சிங்கை நாடு !




பொருளாடும் தொழில்கள் பொலிந்தாடும் துறையாம்

புவிமீதில் புகழ்கொண்ட சிங்கை !

திருவான கலைகள் செழித்தோங்கி வளரும்

தெய்வீகத் திறனாடும் இங்கே !




விதைக்கின்ற தெல்லாம் பொன்னாகும் விளைவை

விளைக்கின்ற நிலமிந்த நிலமே !

வதைக்கின்ற வறுமை வளம்குன்ற உழைக்கும்

வலிமைகொள் நலமெங்கள் நலமே !




பெரும்நான்குக் குடியும் அரும்நான்கு மொழியும்

பிணைந்தாளும் சிறப்பெங்கள் சிறப்பே !

உருவான அன்பால் உறவானோம் இங்கே

ஒருதாயின் பிறப்பெங்கள் பிறப்பே !



குறிப்பு: ______________

"அலைபாடும் வளநாடு...!" ஒரு விளக்கம்.

1975ஆம் ஆண்டு, தேசிய அரங்கக் காப்புக் குழுவும்,சிங்கை
வானொலி நிருவாகமும் கூட்டாக நடத்திய `நம் பாடல்கள்`
என்னும் தலைப்பிலான, சிங்கையின் நான்கு தேசிய
மொழிகளுக்குமான பாடல் இயற்றும் போட்டியில், சிறப்புப்
பாடலாகத் தேர்வு பெற்று, சிங்கை வானொலியிலும்; தொலைக்
காட்சியிலும் பலமுறை ஒலி; ஒளிபரப்பு கண்ட தேசியப் பாடல் இது.

No comments: