Tuesday, August 4, 2009

படித்தவர்கள் பாராட்டுகிறார்கள்...!

“தமிழுணர்வின் மொத்த உருவம் அமலதாசன்”

பிறப்பின் பயனே தமிழ் இலக்கியத்தைச் சுவைத்தலும் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடுதலுமே என்று நம்பி நடப்பவர் அவர். அமலதாசனின் சொல்லும் செயலும், மொழி இலக்கியம் பற்றிய விடாப்பிடியான போக்கும் அவரைப் பற்றிய இத்தகைய மதிப்பீட்டைச் செய்யத் தூண்டுகின்றன.

நாற்பது ஆண்டுகளாக திரு. அமலதாசன் கவிஞராக, தொண்டராக, தலைவராக, உணர்ச்சிமேலிடப் பேசும் பேச்சாளராக, தமிழுக்காக உரத்த குரல் கொடுப்பவராக, எழுத்தாளர்கழகத் தலைவராக நன்கு அறிமுகமானவர்.

“தமிழர் தலைவர் தமிழவேள்”, “புல்லாங்குழல்” அகிய இருநூல்களிலும் நான் போற்றும் சிறப்பியல்பு, அவற்றில் கவிஞர் பயன்படுத்தியுள்ள இயல்பான, எளிமையான இனிய தமிழ்நடை. சிங்கப்பூரின் பன்மொழிச் சூழலில் பேசிப் பழக அதிக வாய்ப்பின்றி, தமிழைத் தாய்மொழியாகக் கற்று, தேர்வு எழுதும் கட்டாயத்திலுள்ள வளரும் தலைமுறையினரும் புரிந்துகொள்ளும் தமிழில் அமலதாசன் கவிதைகள் இருப்பது மகிழ்ச்சி தருகிறது. வாய்விட்டுப் படித்துத் தமிழில் நாப்பழக்கம் எற்பட மாணவர்கள் இக்கவிதைகளைப் படித்துப் பயன்பெறலாம்.

திரு. அமலதாசனின் “புல்லாங்குழல்” கவிதைகளும், ‘தமிழர் தலைவர் தமிழவேள்’ கவிதைகளும் சிங்கப்பூர் சிந்தனை ஓட்டத்தில் உள்ளவை. குடியரசின் சமுதாயம், அரசு, மொழி, பலயினச் சூழல் என வெவ்வேறு துறைகளையும் தொட்டுப் பேசுவன. இதனால் படிப்போர், கவிதை கூறும் பொருளுடனும் அது எழுப்பும் உணர்வுகளுடனும் தங்களை இணைத்துக் கொண்டு கவிதைகளைச் சுவைக்க இயலும்..

திரு. அமலதாசன் எந்தப் பொது நிகழ்ச்சியில் பேசினாலும், தமிழவேளைப் பற்றிக் குறிப்பிடஅல்லது அவர் ஊட்டிய தமிழுணர்வையும் ஆற்றிய பணிகளையும் புகழத் தவறுவதில்லை.எனவே அவர் வெளியடும் முதல் நூல்களுள் ஒன்றாக ‘தமிழர் தலவர் தமிழவேள்’ அமைந்திருப்பது எதிர்பார்க்கக் கூடியதே. அதுவும் தமிழவேள் நூற்றாண்டு நிறைவு எழுப்பியநினைவலைகள் அடங்குமுன் இத்தகைய கவிதைநூல் பிறப்பது நல்லாக்கமே.

தமிழவேள் பற்றிய நூலில் அமலதாசன் கையாண்டிருக்கும் முறை சற்று வேறுபாடானது.நூலின் சரிபாதிக் கவிதைகள், தலைவராக வளர்ந்தவரின் புகழ் பாடுவதற்கு முன், சிங்கப்பூரின் வரலாற்றுப் பின்னணியையும் சமூக நிலைமைகளையும் எடுத்துரைக்கின்றன. இந்த உத்தி திரு. சாரங்கபாணீயின் பணித்திறனைக் கவிஞர் விவரிக்கும் போது நன்கு புரிந்துகொள்ள உதவுகிறது.

அடிக்கடி சமூகத்தைக் கேட்டுப்பார்த்து அலுத்துப்போன பாவலர் அமலதாசன், தாமே தமிழ வேளுக்கு எழுப்பியுள்ள மணிமண்டபமும் அழியாச் சிலையுமே “தமிழர்தலைவர் தமிழவேள், கவிதைப் படைப்பு“


__ செந்தமிழ்ச்செல்வர் வை. திருநாவுக்கரசு
மேனாள் தமிழ்முரசு ஆசிரியர்; தலைவர், வளர்தமிழ் இயக்கம்.
12 / 10 / 2004

No comments: