Friday, August 22, 2008

பட்ட மரம்…!

___கவிஞரேறு அமலதாசன்


பட்ட மரமே ! பட்ட மரமே !
பகலிர வென்று பார்த்தி டாமல் ;
நட்பு அன்பென நாளும் துளிர்த்து
நல்ல உறவாய் வளர்ந்த மரமே !

பொட்டல் வெளியில் ; புயல்மழை வெயிலில் ;
பொலிவெலாம் இழந்துப் புழுங்குவ தென்ன ?
‘ நட்டவன் தண்ணீர் ஊற்றுவான் ‘ என்பது ‘
நடப்பில் உன்வரைப் பொய்யாய்ப் போனதே !

ஏனிந்தக் கோலம் ? எதற்கிந்தக் கொடுமை ?
யாருந்தன் ஆடையைப் பறித்தது ?
எதுயிந்த வெறுமையைப் புரிந்தது ?

நீசொல்வ தெல்லாம் நெகிழ்விக்கும் பாடம் !
நிலைகெட்டப் பிறப்பன்றோ இழிந்தது ?
நீதியின் பிடிக்கென்ன நேர்ந்தது ?

எத்தனை உயிர்க்கு நிழலாய்த் தணித்தாய் !
எத்தனை வாய்க்குக் கனியாய் இனித்தாய் !
புத்தம் புதிய வளிவார்த் திளைத்தாய் !
புன்னகைப் பூவாய்ப் பூத்துக் கிளைத்தாய் !

காற்றில் இலையசைத்துக் கன்னல்பா தொடுத்தாயே !
கனிவாய்க் கிளைக்கையால் புள்ளினத்தை அணைத்தாயே !
ஈற்றில் விறகாகி எரிந்துனையே கொடுத்தாயே !
ஈகம் புரிவதற்கே இப்பிறவி எடுத்தாயே !


குறிப்பு:_________________________

சிங்கப்பூர் நாட்டின் புகழ்மிக்கத் தமிழ்க்கவிஞர் அமலதாசன் ;
கவிஞரேறு என்று போற்றப் படுபவர்; அவர்தம் ‘ பட்டமரம் ‘
என்னும் கவிதையை , சிங்கப்பூர் அரசின் தேசியக் கலைகள் மன்றம்
தேர்வு செய்து , 16 / 08 / 1995 முதல் 19 / 10 / 1995 ஆம் நாள்வரை,
சிங்கப்பூர் பெருவிரைவு தொடர்வண்டியில், (MRT TRAIN) அலங்கரித்து அழகுப் பார்த்தது.

பதிவு:: ‘தமிழ் நேசன்’’ ( 03 / 03 / 1996 ) தமிழ் நாளிதழ் ,
கோலாலம்பூர், மலேசியா.

No comments: