செந்தமிழாய் “மணக்க வாழி” !
___ கவிஞரேறு அமலதாசன்
(17/05/2009 மாலை 6.30 மணிக்கு, சிங்கப்பூர் தேசிய நூலகத்தின், 16வது மாடியிலுள்ள அரங்கத்தில் நடந்தேறிய, முனைவர் இரத்தின வெங்கடேசன் அவர்களின்,
“புதுச்சேரித் தமிழ்க் கவிதைகள்” நூல் வெளியீட்டு விழாவில்,
படித்தளித்த வாழ்த்துப்பா)
பால்வடியும் பவளமுகம்! விண்மீன் கண்கள்!
பரிதிநிறம்! அடிக்கரும்பாய் இனிக்கும் வார்ப்பு!
நூல்பிடித்த வீரநடை! நட்புத் தென்றல்!
நுண்ணறிவு மொழிவீச்சு! செஞ்சொல் பேச்சு!
ஆல்போலும் நிழல்விரிப்பு! அன்புத் தோப்பு!
அழகுமணி இரத்தினமாம் வெங்க டேசர்;
சால்பெல்லாம் பேறெல்லாம் வந்த ணைக்கச்
சந்தனமாய்ச் செந்தமிழாய் “மணக்க வாழி”!
காற்றடிக்கும் நேரத்தைக் கணக்கிட் டாய்ந்து
கைகாட்டும் மணிகாட்டி! இளைய ரென்னும்
நாற்றங்கால்; வேர்ப்பிடித்து விளைக்கத் தூண்டும்
நல்லுழவர்! நீர்வரத்து! உரத்தின் ஊட்டம்!
மாற்றாரைத் தமராக்கும் மனித நேயர்!
மரபுகளை அரவணைக்கும் மாட்சி மிக்கார்!
சான்றாண்மை மிகும்முனைவர் வெங்க டேசர்;
சந்தனமாய்ச் செந்தமிழாய் “மணக்க வாழி”!
கொட்டுகின்ற கருத்துமழை! இலக்கி யத்தேன்!
குறள்பொழியும் மலையருவி! கொழிக்கும் செல்வம்!
பட்டிமன்ற நாட்டாண்மை! வைக்கம் வென்ற
பாசறைவாள்! இலட்சியத்தேர்! கொள்கைக் கோட்டம்!
“வட்டாரம் மேல்கீழென்” றார்ப்ப ரித்து
வாயடியும் கையடியும் செய்வோ ரெல்லாம்;
கட்டாயம் மனம்திருந்த உணர்த்தும் செம்மல்!
கவியமுதாய்த் தனித்தமிழாய் “மணக்க வாழி”!
********************************
Sunday, May 31, 2009
Subscribe to:
Posts (Atom)