_________கவிஞரேறு அமலதாசன்
உனையன்றி துணையுண்டோ தலைவா ? – சுடர்
ஒளியாக உலகெல்லாம் அரசோச்சும் இறைவா !
உனையன்றி துணையுண்டோ தலைவா ?
வினைத்தீர்க்கும் பொருளேநீ “ வருவாய் “ - தலை
விதிநீக்கி; மனம்ஊக்கி; விளைவாக்கி: அருள்வாய் !
உனையன்றி துணையுண்டோ தலைவா ?
புலமைக்கும் திறமைக்கும் புகழில்லாக் காலம் !
பொறுமைக்கும் பணிவுக்கும் பொருந்தாத ஞாலம் !
நிலத்துக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட எல்லை !
நினைவுக்கும் செயலுக்கும் இருக்கின்ற தொல்லை !
உனையன்றி துணையுண்டோ தலைவா ?
சீர்தேடிப் பித்தர்கள் அலைகின்றார் வண்டாய் !
சிறுமைக்கும் பெருமைக்கும் பொருளறியா மண்டாய் !
நேரெல்லாம் நிறையெல்லாம் நீபடைத்தப் பாக்கள் !
நீள்வண்ணத் தோட்டத்தில் எல்லாமெம் பூக்கள் ?
உனையன்றி துணையுண்டோ தலைவா ?
வேரெல்லாம் நீராட விமலக்கை நீட்டு !
விண்தேடும் பறவைக்கும் திசைக்காட்டி ஊட்டு !
ஊரெல்லாம் உறவாக உண்மையை நாட்டு !
ஒளிச்சுடரே; வளிமலரே; உயிர்மணியைக் காட்டு !
உனையன்றி துணையுண்டோ தலைவா ?
*****************
Tuesday, September 9, 2008
Subscribe to:
Posts (Atom)