Saturday, April 19, 2008

அமலதாசன் பாடலுக்கு முதல்பரிசு...!

பாரெங்கும் பவனிவரும் பைந்தமிழுக்குச் சிங்கப்பூரில் சிறப்பிடம்.
குடியரசில் ஆட்சிமொழி எனும் பெருமையைப் பெற்று பீடுநடை போடும்
வளர்தமிழுக்கு, அணிசெய்யும் செயலொன்று அண்மையில் நடந்ததுது.
முத்தமிழ்ப் பாடல் ஒன்று முதல்பரிசை வென்று, தமிழ்நெஞ்சங்களைக்
களிப்புக் கடலில் ஆழ்த்தியது.
நான்கு மொழிகளுக் கிடையில் நடைபெற்ற தேசியப் பாடல் இயற்றும் போட்டியில், தமிழ்ப்பாடல் முதல்நிலையில் வந்தது.

"நம்கதை, நம்பாடல்,நம் இணக்கம் என்னும் கருப்பொருளில் அமைந்த
சிங்கப்பூர் சிறப்பைப் பறைசாற்றும் தமிழ்ப்பாடல்; மலாய், சீன, ஆங்கிலப் பாடல்களுக்கு
ஈடுகொடுத்து வாகை சூடியிருப்பது, சிங்கப்பூர் வரலாற்றில் இதுவே முதல்முறை" என்று,
பெருமிதப்படுகிறார் பாடலை இயற்றிய கவிஞரேறு அமலதாசன்.

"சிறுவயது முதலே எனக்குத் தமிழில் மிகுந்த ஈடுபாடு உண்டு.
கவிதைத் துறையில் கால்பதித்த தொடக்கக் காலத்தில் , திரையிசையைத் தழுவி பாடல்கள் இயற்றி மகிழ்வேன்.
தேசியப் பாடல் போட்டியில் என்படைப்புக்குப் பரிசு என்பதைவிட, தமிழ்ப்பாடலுக்கு
மகுடம் , என்பதே என்னை மகிழ்ச்சிப்படுத்தி மெய்சிலிர்க்க வைக்கிறது" என்று,
தம் உணர்வுகளைச், சிங்கப்பூரின் "தமிழ்முரசு", மலேசியாவின் " மலேசிய நண்பன் " நாளிதழ்களிடம் பகிர்ந்துகொண்டார் கவிஞரேறு.

`சிங்கப்பூர் என்று சொல்லும் போதிலே` என்று தொடங்கும் தேசியப் பாடலுக்கு:
சீன, மலய், ஆங்கில இசைக்கூறுகளை உட்புகுத்தி, அருமையாக இசையமைத்து,
இனிமையாகப் பாடியிருக்கிறார் உள்நாட்டு முன்னணி பாடகரும் இசையமைப் பாளருமான
திரு.குணசேகரன்.

`திரு. குணசேகரனுடன் இணைந்து இந்தப் பாடலை உருவாக்கியது,
நல்ல அனுபவத்தைத் தந்தது. இசைமீது அவர்கொண்டிருகும் காதல்
என்னை மலைக்க வைத்தது. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இன்னும்
நிறைய, குறிப்பாக நாட்டுப் பாடல்களை எழுத விரும்புகிறேன்` என்று,
மேலும் தம் எண்ணங்களை, செய்தியாளர்களிடம் வெளியிட்டார் அமலதாசன்.

எழுத்து வடிவில் இருக்கும் பாடல்; இசையிலும் காட்சியமைப்பிலும் மிளிரும்போது
மேலும் மெருகேறுகிறது, பலரையும் ஈர்க்கிறது.

நடனக் கலைஞர் கவிதாகிருஷ்ணன் மிகவும் முயற்சியெடுத்து,
ஹெய்க் பெண்கள் பள்ளி மாணவியரை தயார்படுத்தி, நாங்கு இனங்களையும்
பிரதிபலிக்கும் வகையில், பாடலுக்கு ஏற்ப கதம்ப நடனத்தை அமைத்திருந்தார்.

கவிஞரேறு அமலதாசன் கைவண்ணத்திலும், பாடகர் குணசேகரனின் இசைக்கோலத்திலும்
உருவாக்கம் பெற்ற, இந்த இனிமையான பாடலுக்கு, முதல்பரிசாக ஐயாயிரம் சிங்கப்பூர் வெள்ளியும், வெற்றிக் கேடயமும் வழங்கப் பட்டது.
தம்பனிஸ் சென்ட்ரல் வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம், போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

நான்கு மொழிகளிலிருந்தும் மொத்தம் 131 பாடல்கள், இப்போட்டியில் பரிசுபெற
அணிவகுத்து நின்றன. அவற்றுள் 11 தமிழ்ப்பாடல்களும் அடங்கும்.
இறுதிச் சுற்றுக்கு, நான்கு மொழிப் பிரிவுகளிலிருந்தும் 10 பாடல்கள் தேர்வுபெற்றன.
அவற்றுள் தமிழ்ப்பாடல் ஒன்றே ஒன்று மட்டுமே. அந்த ஒரு தமிழ்ப்பாடலே அனைத்துமொழிப்
பாடல்களிலும் சிறந்ததென்று முடிவு செய்யப்பட்டு, முதல்பரிசை வென்றது.


சிங்கப்பூர் தேசியநாள் பேரணியில் தமிழ்ப்பாடல்

சிங்கப்பூர், சிங்கப்பூரருடன் வளர்ந்துவிட்ட மக்கள், இந்த இரண்டையும் மையமாக வைத்து,
அனைத்து மொழியினரும் எளிதில் பாடும் வகையில், அமைக்கப்பட்ட இந்தத் தமிழ்ப்பாடல்,
தேசிய விளையாட்டு அரங்கத்தில் நடந்தேறிய, குடியரசின் 41ஆம் ஆண்டு, நாட்டுநாள் அணிவகுப்புப் பேரணியில், (09/08/2006) பல்லாயிரக் கணக்கான மக்கள்; தலைவர்கள் முன்னிலையில், இசைக்கோலம் கண்ட பெருமைக் குரியது.


சிங்கப்பூரை, இளையர்கள் அறியவேண்டும், தொடர்ந்து நாட்டுடன் நடைபோட்டு உயரவேண்டும்,
முன்னேற வேண்டும் என்று கூறாமல் கூறி, நாடி நரம்புகளைத் தட்டி எழுப்பும் இப்பாடலை
இயற்றியவர் கவிஞரேறு அமலதாசன். இசையமைத்தவர் பாடகர் திரு.குணசேகரன்.
பாடியவர் இளைய தலைமுறையைச் சேர்ந்த, சிங்கப்பூர் தொலைக்காட்சி வசந்தம் நடுவத்தின்
நட்சத்திரப் பாடகர், திரு முகம்மது ஷபீர்.


சிங்கப்பூர் தொலைக்காட்சியிலும், வானொலியிலும் அடிக்கடி இடம்பெறும்
`சிங்கப்பூர் என்று சொல்லும் போதிலே` என்று தொடங்கும் இப்பாடல்,
மக்களின் இதயங்களில் என்றென்றும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்
என்பது திண்ணம்.


குறிப்பு: ____________

சிங்கப்பூர் "தமிழ்முரசு" 27 /08/ 2005;
மலேசியாவின் "மலேசிய நண்பன்" 11 /08/ 2005.
மேற்கண்ட நாளிதழ்களின் நேர்காணலில்...!